தடுக்கித் தடுக்கி ஓடிவா
என் மடி வெறுமித்துக்கிடக்கு
உன்னை அமர்த்தி நிரப்பிக்கொள்ள
தோளில் தாவி கழுத்தை
இறுகக்கட்டிப்பிடி
நீ சுகமான சுமைதான்
என்முதுகு எப்பவுமே
உன் பல்லக்கு
நீ விரும்பும்போதெல்லாம்
உனக்கு ஊஞ்சல்
தலைமுடியை பிடித்திழுத்து
என்னை நோகவைக்கும் எண்ணம்
இன்றில்லையா உனக்கு
வா
வந்து என் காதுகளுக்குள்
வீறிட்டுப்போ
எச்சிலூறும் இதழ்களால்
பிஞ்சு முத்தம் தா
ஈரம் துடைப்பதில்
எத்தனை இன்பம் எனக்கு
முளைத்து வரும்
முன்னிரு பற்களால் - என்
விரல்களை கொறித்து விளையாட
வா
என் மடி உனக்காகவே
வெறுமித்துக்கிடக்கு
வெள்ளைச்சாரனில்
மெல்ல சூ போய்விடு
மடியில் சுடு நீர் கொட்டியதாய்
மிட்டாயின் பாணிவடிய
இல்லாது போனாலும்
உன் வீணிவடிய
பாதியில் சுவைத்து
எனக்கும் ஊட்டி எத்திவிட்டு
தத்தி தத்தி ஓட
வா
இன்னும் என் மடி
உனக்காகவே வெறுமித்துக் கிடக்கு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக