வெள்ளி, 28 செப்டம்பர், 2012

எனக்கு பிடித்த பாடல்

வாழைப்பூ ஏன் வளைந்து
நானம் கொள்ளுதோ
வாடை வந்து காதில் ஏதும்
சொல்லிச் சென்றதோ

சீர் கொண்டு போகும் மேகம்
செல்லும் வழியிலே
சிறு துளிகள் தூவிச் செல்லும்
மண்ணின் மடியிலே

அந்திவானம் மஞ்சள் நேரம்
ஏன் சிவந்ததோ
மாலைப் பொழுது மனதை மெல்ல
மயக்கிச் சென்றதோ

கண்களினை மெல்ல மூட
கனவு ஆளுமே
கண்விழித்துப் பார்த்துவிட்டால்
கலைந்து போகுமே

எனக்கு பிடித்த பாடல்




எத்தனை வலிகள்
எத்தனை சுமைகள் இளமனதில்
நித்தமும் கொல்லும்
நினைவினில் தொங்கும் உணர்வலைகள்

கருங்கொடித்தீவின் நறுமலரே
காதலை நெஞ்சில் சுமந்தவளே
நிலவினைப் பருகி வளர்ந்தவளே
நினைவினை விதைத்து நகர்ந்ததென்ன

சிரிப்பினிலே மனம் சிதறவைத்தாய்
செவ்விதழில் சுகம் மடித்து வைத்தாய்
பார்வையிலே எனைப்படிக்க வைத்தாய்
பாதியில் ஏனோ விலக்கிவிட்டாய்

சோகங்கள் கூட சுகமானதே
சொல்லாத காதல் ரணமானதே
ஊமையின் ஆசை கனவானதே
உள்ளத்தில் ஒழித்தாய் உணராமலே





எனக்கு பிடித்த பாடல்





படம்: நீர்மடி
பாடியவர்: சரவணன்
பாடல்வரிகள்: நாசிற்கலிபா
இசை: சுண்டலான்



கண்டல் மரக்காட்டுக்குள்ளே
வலை விரிப்போமா
நண்டு மீனு சொண்டு இறால்
வேகவைப்போமா

பொத்திக் களப்பு வத்திக்கிடக்கு
மெத்த மீனு செத்துக்கிடக்கு
ஒத்தக்காலில் கொக்கு இருக்கு
கொத்தியிழுக்க நேரம் இருக்கு
வாடா நண்பா வாடா
களப்பு வத்திக்கிடக்கு வாடா

நீராடும் ஓடம் கரையில் வாடுதே
நினைக்க நெஞ்சம் தடுமாறுதே
மூலையிலே துடுப்பு தனித்துப்போனதே
மூணுவேளை அடுப்பில் நெருப்புமில்லையே
வாடா நண்பா வாடா
களப்பு வத்திக்கிடக்கு வாடா

நீர்கொண்ட கார் மேகம்
கவலை கொள்ளாதோ
நீர் இன்றி வாடும் மண்ணில்
கண்ணீர் சிந்தாதோ
வாடா நண்பா வாடா மனம்
பத்திக்கிடுது வாடா

வியாழன், 20 செப்டம்பர், 2012

வீணியொழுகும் முத்தமும் பேரன் ஆதிலும்


தடுக்கித் தடுக்கி ஓடிவா
என் மடி வெறுமித்துக்கிடக்கு
உன்னை அமர்த்தி
நிரப்பிக்கொள்ள

தோளில் தாவி கழுத்தை
இறுகக் கட்டிப்பிடி
நீ சுகமான சுமைதான்
என் முதுகு எப்பவுமே
உன் பல்லக்கு
நீ விரும்பும் போதெல்லாம்
உனக்கு ஊஞ்சல்

தலைமுடியை பிடித்திழுத்து
என்னை நோகவைக்கும் எண்ணம்
இன்றில்லையா உனக்கு
வா
வந்து என் காதுகளுக்குள்
வீறிட்டு போ

எச்சிலூறும் இதழ்களால்
பிஞ்சு முத்தம் தா
ஈரம் துடைப்பதில்
எத்தனை இன்பம் எனக்கு

முளைத்;து வரும்
முன்னிரு பற்களால் - என்
விரல்களைக் கொறித்து விளையாட
வா
என் மடி உனக்காகவே
வெறுமித்துக்கிடக்கு

வெள்ளைச் சாரனில்
மெல்ல சூ போய்விடு
மடியில் சுடு நீர் கொட்டியதாய்

மிட்டாயின் பாணிவடிய
இல்லாது போனாலும்
உன் வீணிவடிய
பாதியில் சுவைத்து
எனக்கும் ஊட்டி எத்திவிட்டு
தத்தி தத்தி ஓட

வா
இன்னும் என் மடி
உனக்காகவே வெறுமித்துக் கிடக்கு

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அறுகம்பைத் தீவே வா

                                                                  நாசிற் கலிபா

அழகிய பூவே வா – எழில்
அறுகம்பைத் தீவே வா
கள் கொண்ட மலரே வா
கடும் கோடையின் மழையே வா

வேல்விழிக் கண்கள் கூசும்
வெறிகொண்ட பார்வைகள் போதும்
அஞ்சிலா மீனுடல் தேகம்
கொடி ஆடுதல் போலிடை ஆடும்

அலைகடல் நுரை நிறம் மாறும்
ரதி கரை உலவிடும் நேரம்
நீந்திடும் ஓடங்கள் நாளும்
இது நிலவினைப் பருகிடும் நேரம்

தாவணி நூலிடைப் பூக்கள்
தலையாட்டுது உன் நடை பார்த்து
சிப்பிகள் சிதறிடும் நாதம்
உன் சிரிப்பினில் நண்டுகள் நாணும்

அடியுனுள் சங்குகள் நொறுங்கும்
காற் சதங்கையின் ஒலியென சினுங்கும்
வாடையும் வந்துனை தீண்டும்
என் வசந்தத்தின் வாசலைத் தாண்டும்
                   

மனம் கொத்தி

                                                                       நாசிற் கலிபா

நான் பனைமரம் அல்ல
நீ மரங்கொத்தி....
எறும்பு கடித்த வலிதான் எனக்கு
நீ கொத்தியிழு மனதை

கசிந்து ஒழுகிய - உன்
ஞாபகங்கள் கண்ணீரானது
துடைக்க
கைக்குட்டை ஆகாதென்று
மீசையிடுக்குகளில்
வழிந்தோடியது

நான் பனைமரம் அல்ல
நீ மரம் கொத்தி ...

இறுக்கி பிடித்த மனம் தளர்த்தி
எனை அழவைக்கும் நீ
என்னுள் எங்கிருந்து
உசுப்புகிறாய்.

தும்மல் துளியாய் - அல்லது
எச்சில் துளியாய்
வா அடிக்கடி
கிளிபோல
நாவல்மரக் கொப்பிலிருந்து
பேசலாம்
முருங்கை மரத்தில்
மாம்பழக் குருவியாய்
ஏதோ சொல்லிப் பறக்கலாம்
நீ வந்து விட்;டுப்போ

நான் பனைமரம் அல்ல
நீ மரம் கொத்தி....

ஒரு துளி சொப்பனச் சுகம்

                                                         நாசிற் கலிபா


துகள்களாய் சிதைந்து போன
ஞாபகங்களில்
வா..
சொட்டு நேரமாவது
புல்நுனியின் மேல்
பூவிதலின் மேல்
பனித்துளியாய் ஒய்வெடுத்து
கரைந்து போவோம்
வேர் உறுஞ்ச..

கறுப்பு முகில் களி பிசைந்து
பதுமை செய்து
வானவில்லில் சாயம் கரைத்து
மை பூசி
சூரியச் சுடரில்
சொட்டுக் காயவைத்து
நிலவுக்குப் பின்னால்
ஒழித்து வைப்போம்
வா.. இருவரும்
காற்றிலே மிதந்து சென்று..

உன் வட்டமுக நெத்தியிலே
நிலாக் கிண்ணத்தில் உள்ள
சந்தனப் பொட்டுவைத்து
விடியலில் வீசும்
குளிர் காற்றால் - இதழில்
நோகாமல் முத்தமிட்டு
காற்றிலசையும் தென்னையின்
குருத்தாய் சிரித்து மகிழ்வோம்
பின்..
பூமியின் பெரிதான
மலையைப் பிளந்து - உள்ளே
தாழிட்டு பதுங்கிக் கொள்வோம்
வா..
பூவுக்கு நோகாமல்
புல்வெளிகளால் நடந்து செல்வோம்.

வியாழன், 6 செப்டம்பர், 2012

பாடல்

ஏழை ஏழை என்று சொல்லி
எத்தனை நாள் வாழ்வது
தோளை நிமிர்த்தி ஏரைப்பிடித்தால்
துன்பம் உன்னை வெல்லாது

அஞ்சி அஞ்சி வாழ்வதிலே
இன்பம் என்ன நீ கூறு
கஞ்சும் கூழும் போதும் என்று
கவலையின்றி நீ வாழு

துன்பம் என்ன துன்பம் என்று
துரத்திவிட நீ சேரு
துவண்டிடாமல் சோர்விலாமல்
மன உறுதி கொண்டு நீ வாழு

காலம் காலம் என்று வீனே
காத்துக்கிடத்தல் ஆகாது
நேரம் நல்ல நேரம் என்று
நினைத்து நினைத்து நீ ஏறு

வாழ்க்கை என்ன வாழ்க்கை என்று
சலிப்பதனை நீ போக்கு
வாழும் போது மானமுள்ள
மனிதனாக நீ வாழு!
                    -கிராமத்தான் பொத்துவில்-