வெள்ளி, 5 டிசம்பர், 2014

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி
----------------------------------------------------------

நிகவரட்டிய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளான பண்ணவ முஸ்லிம் மத்திய கல்லூரி மாணவி என்.கே.ஜுமானா ஹஸீன் இம்முறை நடைபெற்ற தரம் - 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 159 புள்ளிகளைப் பெற்று சித்தி பெற்றுள்ளதுடன் பண்ணவ லோலங் ‌வெவ அஸ்- ஸிராஜ் வித்தியாலய மாணவி 160 புள்ளிகளைப் பெற்று சித்தியெய்தியுள்ளார். இது இப்பாடசாலையின் ஒரு மைல்கல்லாகும்.
ஏதிர்வரும் 2015 பெப்ரவரி மாதம் வெள்ளி விழாவினைக் கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கும் இப்பாடசாலையின் இருபத்தைந்து வருட வரலாற்றில் முதல்முறையாக புலமைப்பரிசில் பரீட்சையில் ஒரு மாணவி சித்திபெற்றிருப்பது இப்பாடசாலைக்கும் இக்கிராமத்திற்குமான வரலாற்றுப் பதிவாகும்.  இடமாற்றம் பெற்றுச் சென்ற அதிபர்  எம்.எல்.ஏ. ஹாஸிம் அவர்களின் வழிகாட்டலில் வகுப்பாசிரியை ஏ.எம். றிஸ்வானாஅவர்களின் இடையறாத கற்பித்தலும் இங்கு பாராட்டப்பட வேண்டியதாகும். எதிர் வரும் காலங்களில் இவ்வித்தியாலயத்தின் புதிய அதிபராக நியமனம் பெற்றிருக்கும் யூ.எல்எம். தாஸிம் அவர்களின் வழிநடாத்தலும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் கிராமத்தவர்களின் ஒத்துழைப்பும் இவ்வித்தியாலயத்தின் முன்னேற்றத்தில் இன்றியமையாத ஒன்றாகும்.

வெள்ளி, 3 அக்டோபர், 2014

மிஹிந்தலையின் பதிவாய்...
காப்பியக்கோவுடன் சிரேஷ்ட அறிவிப்பாளர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் - நாச்சியாதீவு பர்வீன் - கிண்ணியா நஸ்புள்ளாவுடன்
மிஹிந்தலையின் பதிவாய்...
காப்பியக்கோவுடன் சிரேஷ்ட  அறிவிப்பாளர் கவிஞர் அஷ்ரப் சிஹாப்தீன் - நாச்சியாதீவு பர்வீன் - கிண்ணியா நஸ்புள்ளாவுடன்
மிஹிந்தலை ஏ பாரிஸ் அவர்களின் நூல் வெளியீட்டின்பின் உறவுகளுடன் ஓர்பதிவு...
இடமிருந்து வலமாக..
காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுத்தீன் - கவி அஷ்ரப் சிஹாப்தீன் - கவி யோ.புரட்சி - கவி கிண்ணியா அமிர் அலி - கவி செந்தூரன் - கவி பெரோஸ்கான் - கவி கிண்ணியா சபருள்ளாஹ் - கவி கிண்ணியா ஏ நஸ்புள்ளாஹ் - அடியேன் மகளுடன் -ஆசான் சமரபாகு உதயகுமார்.
வலம் வருதல் வேண்டுதலா ?
------------------------------------------------------
தென்னங் கீற்றிடையால்
தெரிகின்ற வெண்ணிலவே
தனியாத தாகமதை - கண்ணில்
தந்துவிட்டுச் செல்வதெங்கே...

சித்திரத்துப் பொன் மேனி
பார் சுற்றுகின்ற வெண்ணிலவே
தேடித்தேடி யாரைத்தான் - உடல்
தேய்வதென்ன வெண்ணிலவே...
வயிற்றுச் சுமையுடனே
வலம் வருதல் வேண்டுதலா ?
நிறை மாதக் கற்பினியாய் - நீ
நில்லாமல் செல்வதெங்கே...
பனி இரவின் தனிமையிலே
பாலொளியின் அழகினிலே
கவி வரிகள் நானெழுதி - உளம்
களிப்படைந்தேன் வெண்ணிலவே...
-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்.
”நழுவி” நூல் வெளியீட்டில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் கௌ-எம்.எஸ்.அப்துல் வாஸீத் அவர்களுக்கும் ஐ.ரீ. என். பணிப்பாளர் புரவலர் ஹாஸீம் உமர் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2014-09-20ம் திகதி பி.ப. 4:00 மணிக்கு பொத்துவில் பிரதேச சபையினால் அமைக்கப்பட்ட எமது சிறுவர்பூங்கா திறப்புவிழாவும் பி.ப. 4:30க்கு சிறுவர் பூங்காவில் எனது கவிதை நூல் அறிமுகவிழாவும் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெறவிருக்கிறது.
நிகழ்வில் கலந்து சிறப்பிக்க அனைத்து உள்ளங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
-நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவுடன்
-கிராமத்தான் கலீபா-
பொத்துவில் ஹிதாயாபுரத்தில் அமைக்கப்பட்ட "தவிசாளர் கடற்கரை சிறுவர் பூங்கா" திறப்பு நிகழ்வுக்கு(2014/09/20) அதிதிகளை அழைத்துச்செல்லும்போது
ஓநாயும் அபாபீல்களும்
----------------------------------------
மூத்திர நெடியோடு இறுக்கிப் போர்த்தி
வந்திருந்த வழுக்கை ஓநாய்
கடைவாய் பற்களுக்குள் சிக்கிய
மாமிசத் துண்டிழைகளை
வழி நெடுகிலும் அசைபோட்டு
புனிதத்தின் பெயரால் பிரசங்கிக்கிறது...

நர வேட்டையாடி ஓயாத பசியில்
அந்னிய காடடொன்றிற்குள் அரசமரியாதை
துவக்குகளேந்தி அழைத்துவரப்பட்டிருக்கு
பிணக் குவியல்களின் மீது
வெறிபிடித்தலைந்த இரத்தக்கறையோடு
ஓநாய் வந்த தடமெங்கும் பிணவாடை
ஹலாலுணவில் பாய்ந்து குதறி
மாடுகட்டியோய்ந்த புலால்தின்னிகள்
பன்றியிறைச்சியை புசித்துக்கிடந்ததுகள்
சருகு புலி கொடுப்புலிகள்
ஓநாயின் வரவால்
வாலைச் சுருட்டிக்கொண்டு வரிசையாகின
தேசமெங்கும் சிதறிக்கிடக்கும் சிறுபான்மையின்
கொதித்துக் கொண்டிருக்கும் மனதின் பிரார்த்தனையில்
”அபாபீல்”களுக்கான கற்களை
சூடாக்கிக் கொண்டிருக்கிறது
மழயைில்லாத இந்தக் கோடை !
-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்.
சகோதரர் முஸ்டீன் எழுதிய "ஹராங்குட்டி " சிறுகதைத் தொகுதியை நண்பர்கள் பொத்துவில் புக் சொப்பிலும் பெற்றுக்கொள்ளலாம்.
எனது ” நழுவி” கவிதை நூலை கொழும்பில்”பூபாலசிங்கம் புத்தகசாலை”யிலும்(வெள்ளவத்தை) - தெமடகொட”இஸ்லாமிக் புக் ஹவுஸி”லும் பொத்துவிலில் ”பொத்துவில் புக் சொப்”பிலும் பெற்றுக்கொள்ளலாம்.
மாயம் நிறைந்த உலகை ஆளும்
நாயகன் நீயல்லவா
மானிட வாழ்வின் தேவைகளறிந்த
ஏகனும் நீயல்லவா...
-மாயம் நிறைந்த-
அர்ஷதன் நிழலை அடியார்க்கருளும்
அதிபதி நீயல்லவா
அதிபதி நீயல்லவா
ஆக்கிட அழித்திட குன்னென்றோதும்
குணமும் உனதல்லவா
குணமும் உனதல்லவா
அருளும் உனதல்லவா - எல்லாப்
புகழும் உனதல்லவா
-மாயம் நிறைந்த-
கருவினில் உருவை காத்திடச்செய்யும்
கருணை உனதல்லவா
கருணை உனதல்லவா
உருவினில் உயிரை புகுத்திடச்செய்யும்
உன்னதம் உனதல்லவா
உன்னதம் உனதல்லவா
ரஹ்மான் நீயல்லவா - அர்
ரஹீமும் நீயல்லவா
-மாயம் நிறைந்த-
சுழலும் உலகதை சுருட்டிடுமொருநாள்
சூட்சுமம் உனதல்லவா
சூட்சுமம் உனதல்லவா
சூனியமாக்கிடும் வாழ்க்கை நிலையின்
சூழ்ச்சியும் உனதல்லவா
சூழ்ச்சியும் உனதல்லவா
அஹதும் நீயல்லவா - அஸ்
ஸமதும் நீயல்லவா
-மாயம் நிறைந்த-

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

நீயென்ன அமலாபாலா
விழியென்ன யாழா வாளா
வருவாயா எந்தன் ஆளா
தருவேனே கூலா கோலா
                                                                                      -நீயென்ன-

செல்லச்சண்டை பிடிப்போம் வா
சேர்ந்து பாட்டுப்படிப்போமா
குத்துச்சண்டை குங்பூ எல்லாம்
கத்துத்தாரேன் வா..வா வா..வா....
                                                                                      -நீயென்ன-

வாலி உன்னை காணாமல்
வைரமுத்து கேளாமல்
கண்ணதாசன் கவிதை போலே
பூவும் காயும் பழமும் நீதான்....
                                                                                     -நீயென்ன-

நிலவில் சென்று ஒழிவோம் வா
நீந்தி கடலில் குளிப்போமா
விரியும் உந்தன் இதழின் இடையில்
விடியவிடிய கவிதை படிக்க...
                                                                                     -நீயென்ன-

-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்
என் செல்ல பொம்மை
-------------------------------
சின்ன பொம்மை ஆடுது - அது
சிலுக்கு சட்டை போடுது
அழகு பாட்டு பாடுது - அது
அலுப்பில்லாமல் ஆடுது

                                                                           -சின்ன..-

தம்பி தங்கை கூடவே - தன
தனக்கு தாளம் போடவே
தரையில் நின்று ஆடுது - அது
தலையை தலையை ஆட்டுது

                                                                          -சின்ன...-

சின்ன கைகள் அசைக்குது - அதன்
சிலுக்கு சட்டை சுழலுது
சிமிட்டி சிமிட்டி கண்களை - என்
செல்ல பொம்மை ஆடுது

                                                                          -சின்ன....-
-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்.

வண்ணப்பூக்கள் பாராயோ
----------------------------------
வண்ண வண்ண பூக்கள் பார் - அது
வடிவாய் மலர்ந்து மணக்குது பார்
வெள்ளை நிறத்து பூக்கள் எல்லாம் - ஏனோ
இரவில் தானே மலர்கிறது

                                                                                                            -வண்ண-

விரிந்த தாமரை குளத்தில் பார் - நாம்
விரும்பும் ரோஜா முள்ளில் பார்
நீல அல்லிப்பூவிடையே - நின்று
நீந்தும் மீன்கள் துள்ளுது பார்

                                                                                                            -வண்ண-

உலகில் பெரிய மலரை பார் - உயி்ர்
கொல்லும் மலரும் உள்ளது பார்
அழகு மலரின் அதிசயம் பார் - அதில்
ஆபத்தும் உள்ளதை எண்ணிப்பார்

                                                                                                           -வண்ண-

பூக்களில் எத்தனை நிறம் உண்டோ - அதில்
அத்தனை அத்தனை குணம் உண்டாம்
ஈக்களும் தேனீ பூச்சுகளும் - பூவில்
எடுக்கும் தேன் துளி அரு மருந்தாம்

                                                                                                          -வண்ண-
-கிராமத்தான் கலிபா-
பொத்துவில்.
வீதி ஒழுங்கைப் பேணிடுவோம்
-------------------------------------------

வலது பக்கம் நடந்திடனும் - நாம்
வரிசையாகவே நடந்திடனும்
வீதி ஒழுங்கை பேணிடனும் - நாம்
விபத்துக்கள் தவிர்த்து வாழ்ந்திடனும்

அகல வீதி கடந்திடனும் - முன்பு
அக்கம் பக்கம் பார்த்திடனும்
அவசரமாக கடந்திடனும் - வரும்
ஆபத்து உணர்ந்து நடந்திடனும்

மஞ்சள் கோட்டாள் கடந்திடனும் - தினம்
மறவாமல் அதனை பேணிடனும்
தரிப்பிடம் தனிலே தரித்து நின்று - நாம்
ஏற இறங்க பழகிடனும்

அம்மா அப்பா கைப்பிடித்து - அவர்
அறிவுரை சொற்படி ஒழுகிடனும்
ஆட்டம் போட்டு வீதியிலே - பிறர்
அவஸ்தைப்படுவதை தவிர்த்திடனும்

-கிராமத்தான் கலிபா-
பொத்துவில்
நீலக்கடலினை இரசிப்போமா
----------------------------------------
நீலக்கடலினை பார்ப்போம் வா – அதில்
நீந்தும் ஓடம் இரசிப்போம் வா
துள்ளும் கடலலை இரைச்சலிலே
துரத்தி நண்டு பிடிப்போம் வா

சிரித்து மகிழ்ந்து மடிநிறைய
சிப்பி சங்கு சேர்ப்போம் வா
சரிந்து சரிந்து கடலலைகள்
விரைந்து வருவதை இரசிப்போம் வா

மிதக்கும் கப்பல் பார்ப்போம் வா – அங்கு
மீனவர் வாழ்க்கை அறிவோம் வா
மண்ணால் வீடு அமைத்தங்கு
உடைத்து உடைத்து மகிழ்வோம் வா

காலைச்சூரியன் பார்ப்போம் வா - அந்த
காட்சி இறைவன் சாட்சியடா
அந்தி நேரம் பந்தாட நாம்
அம்மா அப்பா அழைப்போமா

-கிராமத்தான் கலீபா-
பொத்துவில்

திங்கள், 20 ஜனவரி, 2014

என்னே வரவேற்பு 2014-01-01 எனும் தேதிக்கு

என்னே வரவேற்பு
2014-01-01 எனும் தேதிக்கு
---------------------------------------
தேதி சுமந்திருக்கும் நாள்பற்றி
யாரும் கண்டுகொள்வதாயில்லை
இப்படித்தான் ஒருநாள் எல்லா நாட்களும் கடந்தன
என்பதுபற்றி

அப்படியென்ன நோக்காட்டை
பதிவுசெய்தது சென்ற ஆண்டு ?
இப்படித்தானே வரவேற்றோம்
மாலைகளணிந்து பட்டாசுகள் வெடித்து

சில பாற்பானைகள் வழிய வழிய பொங்கியதே
எதனைக்கண்டோம்
பெரிய சிறிய கொப்புளங்களைத்தவிர

எல்லா இரவுகளையும் போல்
இன்றும் புலர்ந்தது புணர்ந்தது..
யாருமதில் திருந்திக்கொள்வதாக
அல்லது திருந்திவிட்டதாக சத்தியங்கள் செய்து
புது வாழ்வுக்குள் புகுந்துவிட்டதாய்
காகம் கத்தி பொழுதுபட்டஇதுவரைக்கும்
என் காதுகளுக்குள் இரையவில்லை

நாளையும் போனவருஷம் கூவிய
அதே சேவல்கூவும் குயில் கூவும்
பொழுதுவிடியும் - இனி
எல்லோரும் பழைய வாழ்க்கைக்கு
பழக்கப்டுவார்கள்

நான் எப்போதும் போலவே மரங்கொத்தி தானே.....


- கிராமத்தான் கலீபா -
பொத்துவில்.
வேறாக்கி கிடத்திடமுடியாமல்
வேரோடிக்கிடக்கும் மனதின் ஆழத்தில்----

என் பிறந்த நாள் பரிசாக
நீ உதிர்த்துப்போன புன்னகையும்
பிரிவுகளின் தவிப்புகள்
சிந்தும் கண்ணீர்த்துளிகளும்
உன்னில் எனக்கு பெறுமதியானவை

மெல்ல மெல்ல நகரும் பொழுதுகள்
வாழ்வின் பாகங்களை
சிதைத்துக்கொண்டே செல்லும்
ஓர் இரவின் ஓரத்தில்
உன் ஞாபகங்கள் சுமக்கும் என்னை
தனிமைப்படுத்திவிடுகிறது

கனவுகள் பூச்சியங்களாகும்
கருத்தரிக்காத இரவுகளில்
உன் பிரம்மையின் பொய் நிழல் தழுவும்
என் உடல்
பாயோடு இழையோடிக்கிடக்கும்
நீ வந்து நோய்விசாரித்துச் செல்ல…

-கிராமத்தான் கலிபா-
பொத்துவில்